Monday, August 31, 2009

வானம்

கவலைதோய்ந்த கருத்தமுகத்துடன்
பொட்டில்லா வானம்
சீண்டிப்பார்த்தால் சிந்திவிடும்
கண்ணீர் துளிகள் பளிச்சிடும் கண்களில்
பட்டுத் தெறிக்கும் பார்வை முத்துக்கள்
மண்ணில் விழ மண்ணில் நடக்குமோர்
மகரந்தச்சேர்க்கை வானம் தந்தகானம்
இருட்டு மேகத்தின் கண்ணீர் துளிகள்
மின்னல் தந்ததாக்குதலில்பெருத்தகண்ணீர்
வானமுரசின் வரவால் காணாமல்போகும்
கண்ணீர் துளிகள் ., நெற்றிப் பொட்டை
மறைத்து கருப்புப் போர்வை போர்த்திய
வானப் பெண் பூமிக்கு தந்த வெகுமதி

Sunday, August 16, 2009

அலைகள்

நதியின் ஓரத்தில்
நாணம் கொண்ட கோரைகள்
மச்சங்களின் வருகைக்கு
காத்திருக்கும் நாரைகள்
ஒற்றைகாலில் தவம்
செய்யும் கொக்குகள்
இரட்டைக் கிளவியின் இசையில்
இன்பப் பயணத்தில்
காற்றின் உரசல்கலோடு
கரையை நோக்கிப் பயணம்

Sunday, January 25, 2009

அரசியல் ஆதாயம்

சிங்களச்சண்டையில் குளிர்காயும் அறிக்கைகள், ஆள் மாற்றி மாற்றி அறிக்கை யுத்தங்கள்,தினசரிகள் வாயிலாக வரத் தொடங்கிவிட்டது. ராஜினாமா நாடகங்கள் அரங்கேற்றப் போகிறது. வரப்போகும் தேர்தலுக்கு வாக்காளர்களை ஏமாற்ற அரசியல் காய்களை நகர்த்த தலைநகரில் தயாராகிவிட்டனர். சிங்களத் தமிழன் நிலை பரிதாபமோ இல்லையோ, தாய்த் தமிழன் நிலையும் பரிதாபம ஆகப்போகிறது. வியாபாரச் சந்தையில் விரிக்கத் தொடங்கிய தமிழ் சாம்ராஜ்ஜியம் சரிவை கண்டபின் நீலிக்கண்ணீரும் கட்டுரைகளும்,கவிதைகளும் அறிக்கைகளும் வசனங்களும் வாரிவழங்கப் போகிறார்கள். பசித்தவனுக்கு பாலைக் கொடுக்காமல் பாலைத் தயிராக்கி, தயிரை மோராக்கி, மோரை வெண்ணையாக்கி, அந்த வெண்ணையை நெய்யாக்கி நெய்யையும் வியாபாரமாக்கி விற்று அதன் வாசனையை மட்டும் பசிக்குக் கொடுக்கப் போகும் அறிக்கைகள், நாடகங்கள் இனி வரும்.

முல்லைத்தீவும் கைவசம் என சிங்களச் சிப்பாய்கள் அறிவிப்பு - அரசியல்வாதிகளின் அடுத்த முகங்கள் நாளைய ஏட்டில் பிரதிபலிக்கும். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கொக்கு போல் ஓட்டுக்காக மக்களை குழப்பப்போகும் அரசியல்வாதிகள்;

தமிழனை ஏலமிடப்போகும் அரசியல்வாதிகளுக்கு நாமும் குடியரசு வாழ்த்து சொல்லுவோம்...

Monday, January 19, 2009

நாட்டு நடப்பு

குண்டும் குழியுமாய் சாலைகள்
குடுகுடுப்பைக்காரனாய்
வண்டி ஓட்டிகள்
மணிக் கணக்கில்
காத்திருக்கும் வாகனங்கள்
ஆபத்தில் மருத்துவமனைக்கு
செல்ல முடியாத ஆம்புலன்சுகள்
வழி கிடைக்காமல் விழிபிதுங்கும்
நிற்கும் பாதசாரிகள்
வேடிக்கை பார்க்கும் விண்மீன்கள்
வேதனைதரும் பிச்சைக்காரர்கள்
நையாண்டியான அரசியல்வாதிகள்
ஊழலின் மொத்த உருவங்கள்
எதிர்காலம் பற்றிய கவலையில்லாத
நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்
கலாச்சாரப் போர்வையில்
மதிமயங்கி அலையும்
இளைய சமுதாயம்
கவலையோடு பார்க்கும்
மூத்த சமுதாயம்..
தி.அமுதி.